Published : 09 Oct 2025 05:35 AM
Last Updated : 09 Oct 2025 05:35 AM
தென்காசி: தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதற்கு மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் தலைமை வகித்தார். ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முனைஞ்சிப்பட்டி மற்றும் பத்தமடை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு தொடர்புடையதாக கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குறித்து, மத்திய அரசிடமிருந்து கடந்த 1-ம் தேதி அவசரக் கடிதம் கிடைத்தது.
உடனடியாக அந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதித்தோம். தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் அந்த மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என்றாலும், தனியார் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இருமல் மருந்தில் டைஎத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம்கூட இருக்கக் கூடாது. ஆனால், 48 சதவீதம் வரை கலந்திருப்பது பெரும் குற்றமாகும். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். பிரதமரிடமும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளோம். இக்கோரிக்கையைப் பரிசீலிப்பதாக கூறிஉள்ளனர். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT