Published : 09 Oct 2025 06:40 AM
Last Updated : 09 Oct 2025 06:40 AM
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பங்கேற்க தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிர்வாகி பவுன்ராஜ் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், “வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
விரைவில் விஜய் வருவார்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் கடந்த 2 நாட்களாக சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய்யை பேசவைத்தார். இந்நிலையில், கரூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூரில் பாதிக்கப்பட்ட 33 குடும்பத்தினருடன் தலைவர் விஜய் வீடியோகால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்களிடம் “தைரியமாக இருங்கள், விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்” என கூறினார். அவர் கரூர் வருவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துகூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு புலனாய்வுக் குழு... கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்க்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் கடந்த 5-ம் தேதி முதல் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூரைச் சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் 7 பேர் குழு முன் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் “சம்பவம் நடந்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? விஜய் எப்போது வந்தார்? தவெக சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டதா?” என்பன உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டு, தகவல்களை சேகரித்தனர். மேலும், சிலரின் செல்போன்களை வாங்கி விபத்து நடந்த நேரத்தில் யாரிடமிருந்து அழைப்பு வந்தது, யாரை அழைத்துள்ளார்கள் என பரிசோதித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT