Published : 09 Oct 2025 05:43 AM
Last Updated : 09 Oct 2025 05:43 AM

போராடும் மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது சரியல்ல: பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: பணி வரன்​முறை செய்​யக்​கோரி போராடும் கேங்​மேன் தொழிலா​ளர்​களை கைது செய்​வது ஏற்​கத்​தக்​கது அல்ல என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: மின்​வாரி​யத்​தில் பணி​யாற்​றும் கேங்​மேன் தொழிலா​ளர்​கள், தங்​களை கள உதவி​யாளர்​களாக பணி வரன்​முறை செய்ய வலி​யுறுத்​தி, தமிழகம் முழு​வதும் 10 தலைமை பொறி​யாளர்​கள் அலு​வல​கங்​கள் முன்பு அக்​.7 முதல் காத்திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வருகின்றனர்.

இந்​நிலை​யில் சென்னை கே.கே.நகர் தலைமை பொறி​யாளர் அலு​வல​கம் முன்பு அமை​தி​யாக காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்ட தொழிலா​ளர்​களை காவல்​துறை அன்று இரவு கைது செய்​து, நேற்று அதி​காலை விடு​வித்​துள்​ளது. அதைத்​தொடர்ந்து மீண்​டும் இத்​தொழிலா​ளர்​கள் நேற்று காலை​யில் போராட்​டத்​தில் இறங்​கினர். அவர்​களை காவல்​துறை கைது செய்து திருமண மண்​டபத்​தில் அடைத்து வைத்​துள்​ளது.

கடந்த 2023-ல் ஏற்​பட்ட பெரு​மழை, வெள்​ளத்​தின்​போது கேங்​மேன் தொழிலா​ளர்​கள் அயராது பணி​யில் ஈடு​பட்​ட​தால், அவர்​களை கள உதவி​யாளர்​களாக பணி வரன்​முறை செய்ய நடவடிக்கை எடுக்​கப்​படும் என மின்​சா​ரத் துறை அமைச்​சர் அறி​வித்​தார். இந்த அறி​விப்பை நிறைவேற்ற இது​வரை எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​காததன் காரண​மாகவே தற்​போது தொழிலா​ளர்​கள் போராட்​டத்​தில் இறங்​கி​யுள்​ளனர்.

கேங்​மேன் தொழிலா​ளர்​களின் நியாய​மான கோரிக்​கைகளுக்கு பேச்​சு​வார்த்தை மூலம் தீர்வு காண்​ப​தற்கு பதிலாக, காவல்​துறை மூலம் தொழிலா​ளர்​களை தமிழக அரசு கைது செய்​வது எவ்​விதத்​தி​லும் ஏற்​கத்​தக்​கது அல்ல. இது சரி​யான ஜனநாயக நடை​முறை​யா​காது. எனவே, கைது நடவடிக்​கைகளை கைவிட்டு பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறு​த்​தி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x