Last Updated : 09 Oct, 2025 10:36 AM

 

Published : 09 Oct 2025 10:36 AM
Last Updated : 09 Oct 2025 10:36 AM

காமராஜர் பவனுக்கு போட்டியா பெருந்தலைவர் பவன்? - கலகல கோவை காங்கிரஸ் கலாட்டா அரசியல்

கோவை கீதாஹால் சாலையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான ‘காமராஜர் பவன்’ உள்ளது. இங்கு தான் கோவையின் மூன்று மாவட்ட தலைவர்களின் அலுவலகங்களும் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத் தலைவர் பதவியை விட்டு மயூரா ஜெயக்குமார் இறங்கிய போது தனது இடத்தில் தனது ஆதரவாளரான கருப்புசாமியை உட்கார வைத்தார்.

அதனால் மாவட்ட தலைவர் அலுவலகத்திலேயே தனக்கென ஒரு பிரத்யேக அறையை ஒதுக்கி அங்கே அமர்ந்து அரசியல் செய்து வந்தார் மயூரா ஜெயக்குமார். இந்தச் சூழலில் அண்மை மாற்றத்தில் கருப்புசாமிக்கும் கல்தா கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இதையடுத்து காமராஜர் பவனுக்கு போவதை தவிர்த்த மயூரா ஜெயக்குமார் இப்போது, ‘பெருந்தலைவர் பவன்’ என்ற அலுவலகத்தை கோவை - திருச்சி சாலையில் திறந்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ‘‘எந்தக் கட்சியா இருந்தாலும் ஒரு ஊருக்கு ஒரு அலுவலகம் இருப்பது தான் முறை. ஆனால், மயூரா ஜெயக்குமார் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு போட்டியாக தனியாக அலுவலகம் திறந்திருக்கிறார். புதிதாக வந்திருக்கும் மாவட்டத் தலைவருடன் இணைந்து செயல்படாமல் மயூரா ஜெயக்குமார் போட்டி அலுவலகத்தை திறந்து வைத்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளை அங்கு வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் தேவையற்ற குழப்பம் வரும் என்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமைக்கு தகவல் சொல்லி இருக்கிறோம்” என்றனர். இதுகுறித்து மயூரா ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, “நான் திறந்தது எனது பர்சனல் அலுவலகம். நான் கட்சி வேலை செய்யக்கூடாது என சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. பழைய கட்சி அலுவலகத்தில் இருந்த எனது அறையை புதிய மாவட்டத் தலைவர் தனக்கு கட்டாயம் வேண்டும் என்றார். அதனால் அதை அவருக்குக் கொடுத்து விட்டேன். கட்சியின் அகில இந்திய செயலாளரான எனக்கும் கட்சிப் பணிகள் உள்ளன.

என்னை சந்திக்கவும் கட்சி பிரமுகர்கள் வருவார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் எனக்கு அறை இல்லை. அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இங்கு பணியாற்றுவது எனக்கு சிரமம். அதனால் தான் நான் தனியாக அலுவலகம் திறந்துள்ளேன். இது போட்டி அலுவலகம் கிடையாது’’ என்றார்.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்குள் மயூரா தனியாக அரசியல் செய்வதை அனுமதிக்கக் கூடாது என சிலர் எதிர்ப்புக் கிளப்பியதாலேயே மயூரா ஜெயக்குமார் தனியாக அலுவலகம் திறந்திருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கும் நிலையில் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் விஜயகுமாரிடம் இதுகுறித்து பேசினோம், ‘‘மயூரா ஜெயக்குமார் தனியாக அலுவலகம் திறந்ததை நாங்கள் தடுக்க முடியாது.

அவர் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படவே அழைப்பு விடுத்துள்ளேன். கோஷ்டி அரசியல் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்படலாம் என தெரிவித்து உள்ளேன். 100 சதவீதம் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன். யாரையும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என நான் சொல்லவில்லை’’ என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x