Published : 09 Oct 2025 10:08 AM
Last Updated : 09 Oct 2025 10:08 AM
கடந்த முறை திமுக கூட்டணியில் நாகையில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் முகமது ஷாநவாஸை வெளியூர்காரர் என்று பிரச்சாரம் செய்தார்கள். அதையெல்லாம் மீறி ஆறாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைத்தது திமுக. இம்முறையும் தொகுதி உங்களுக்குத்தான் என ஸ்டாலினே சொல்லிவிட்டதாக ஷாநவாஸ் பெருமிதத்துடன் சொல்லி வருகிறார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் தொகுதிக்காக ஷாநவாஸ் சாதித்துக் கொடுத்தது கம்மிதான் என்பதால் இம்முறை அவருக்கான வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்று கணிக்கும் உள்ளூர் திமுக-வினர், நாமே போட்டியிட்டுப் பார்க்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.
இதனிடையே, “தொகுதியை இம்முறை விசிக-வுக்கு ஒதுக்காவிட்டாலும் நிச்சயம் அண்ணன் போட்டியிடுவார்” என விசிக தொகுதி செயலாளர் அறிவழகனின் விசுவாசிகள் ஊருக்குள் தம்பட்டம் அடிக்கிறார்கள். இன்னும் சிலரோ, “விசிக-வே போட்டியிட்டாலும் உள்ளூர்வாசியை நிறுத்துங்கப்பா” என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி ஷாநவாஸுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் உள்ளடி வேலைக்கு பஞ்சமே இருக்காது என்பதால் மாவட்ட திமுக செயலாளரான கவுதமன் நாகையில் திமுக போட்டியிட்டால் நல்லது என தலைமையை வலியுறுத்தி வருகிறாராம்.
வாய்ப்பமைந்தால், தானே போட்டியிடவும் அவர் காய் நகர்த்துகிறார். இவருக்கு போட்டியாக வரகூர் ராஜேந்திரன், வேளாங்கண்ணி தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோரும் வாய்ப்புக் கேட்கலாம். அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜீவானந்தம், ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ-வான ஆசைமணி உள்ளிட்டவர்கள் இம்முறை சீட்டுக்கு மோதலாம். ஆனால், கடந்த முறை போட்டியிட்ட தங்க. கதிரவன் மாவட்டச் செயலாளரை தாஜா செய்து இம்முறையும் நாகையை பெற்றுவிடுவார் என்கிறார்கள்.
தவெக தரப்பில் மாவட்டச் செயலாளர் சுகுமாருக்கே சீட் என்கிறார்கள். ஆனாலும், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுகன்யா, வழக்கறிஞர் கிங்ஸ்லி ஜெரால்டு, சேகர் ஆகியோருக்கும் நாகை சீட்டில் ஒரு கண் இருக்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே இங்கே வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும் என்கிறார்கள் நாகை வாக்காளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT