Published : 09 Oct 2025 10:02 AM
Last Updated : 09 Oct 2025 10:02 AM
மேற்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 39 தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இருக்கிறார். இதில், 23 தொகுதிகள் இப்போது அதிமுக கூட்டணி வசம் உள்ளதால் அவற்றை மீட்டெடுக்கும் ‘சக்தி’ செந்தில்பாலாஜிக்கு உள்ளது என நம்பியே இந்தப் பொறுப்பை அவரிடம் விட்டிருக்கிறது திமுக தலைமை.
இதற்கேற்ப தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது களப்பணியைத் தொடர்கிறார் செந்தில்பாலாஜி. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் அதிமுக வசம் உள்ள 10 தொகுதிகளை மீட்கவும், எஸ்.பி.வேலுமணி போன்ற அதிமுக தளகர்த்தர்களை வீழ்த்தவும் சில செயல்திட்டங்களை திமுக செயல்படுத்தவுள்ளது என்கின்றனர் கோவை மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “வைகோ மதிமுகவை தொடங்கியபோது, கோவை மாவட்டத்தின் செல்வாக்கான மாவட்ட நிர்வாகிகளாக இருந்த மு.கண்ணப்பன், ஆர்.டி.மாரியப்பன் உள்ளிட்டோர் அவரின் பின்னால் சென்றார்கள். அந்த சமயத்தில் கோவை மாநகரில் சி.டி.தண்டபாணியும், புறநகரில் பொங்கலூர் பழனிசாமியும் தான் திமுகவை தாங்கிப் பிடித்தனர். மு.ராமநாதன், விடுதலை விரும்பி, சுப்பையன் உள்ளிட்டோரும் திமுகவின் வேர்களாக விளங்கினர்.
இதற்கு அடுத்த காலகட்டத்தில் வீரகோபால் போன்ற சிலர் மட்டுமே திமுகவின் அறியப்பட்ட முகங்களாக இருக்க, மலரவன், செ.ம.வேலுச்சாமி, பொங்கலூர் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி போன்றோரின் செயல்பாடுகளால் கோவையில் அதிமுகவின் வளர்ச்சி அசுரவேகம் பிடித்தது.
இதன் காரணமாக, 2001, 2011 மற்றும் 2021 தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வென்று அதை தனது கோட்டையாக்கிக் கொண்டது. திமுகவைப் பொருத்தவரை 1996-ல் அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும், 2006-ல் 2 தொகுதி, 2016-ல் ஒரு தொகுதி என தேய்ந்துகொண்டே போனது.
2021-ல் திமுக ஆட்சி அமைந்தாலும், கோவை மாவட்டத்துக்கு எம்எல்ஏக்களே இல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சக்கரபாணியை பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டி வந்தது. ஆனால், கட்சியை வளர்க்க அவர் போதிய கவனம் எடுத்துக் கொள்ளாததால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பாலாஜி, கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவுக்கு பெரு வெற்றியை பெற்றுக் கொடுத்து தலைமையின் குட்புக்கில் இடம்பிடித்தார் செந்தில்பாலாஜி. அதனால் இப்போது ஒட்டுமொத்த மேற்கு மண்டல வெற்றிக்கான முழுப் பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டது திமுக.
மேற்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவையில் திமுகவை ஜெயிக்கவைக்கத் தேவையான அனைத்து அஸ்திரங்களையும் எடுக்க செந்தில்பாலாஜிக்கு தலைமை அங்கீகாரம் அளித்துள்ளது. சமீபத்திய கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் மாற்றத்தில் இருந்து பாலாஜியும் தனது அதிரடிகளை நடத்த ஆரம்பித்துவிட்டார். கட்சியில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள், கோஷ்டி சேர்ப்பவர்கள் இனி அடுத்தடுத்து களையெடுக்கப்படலாம்.
இதுமட்டும் போதாது, இம்முறை கரூருக்குப் பதிலாக கோவையில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்றும் திமுக தலைமை செந்தில்பாலாஜிக்கு அன்புக்கட்டளை இட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கேற்பவே அடுத்து வரும் நாட்களில் செந்தில்பாலாஜியின் வியூகங்கள் அமையும்.
‘கரூர்காரர்கள் கோவையை ஆள்வதா’ என ஆரம்பத்தில் கோவை மண்ணின் மைந்தர்களுக்கு இருந்த மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்போது செந்தில்பாலாஜியை ஏற்கத் தொடங்கி விட்டனர். மாநகராட்சி கவுன்சிலர்களில் தொடங்கி, எம்.பி. வரை அத்தனை பேருமே இப்போது செந்தில்பாலாஜியின் கண்ணசைவுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அவரே நேரடியாக கோவையில் களமிறங்கும் பட்சத்தில் கட்சியினர் மத்தியில் இன்னும் கூடுதலாக உற்சாகம் பிறக்கும். எதிர்த்தரப்பில் எஸ்.பி.வேலுமணி போன்றவர்களின் தொடர் வெற்றிக்கான வியூகங்களையும் வீழ்த்திக் காட்டுவார். இதனாலேயே செந்தில்பாலாஜியை கோவையில் களமிறக்குகிறது திமுக தலைமை” என்கிறார்கள் இதுபற்றி செந்தில்பாலாஜியிடமே கேட்டுவிடலாம் என அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால், பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT