Published : 08 Oct 2025 02:42 PM
Last Updated : 08 Oct 2025 02:42 PM
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
காசா இனப்படுகொலையைக் கண்டித்தும் சுதந்திர பாலஸ்தீனம் அமைய ஆதரவு தெரிவித்தும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிபிஎம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!
எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.
இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்.” என தெரிவித்தார். இந்த கருத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் பதிவை டேக் செய்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?
பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?. கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை.” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT