Published : 08 Oct 2025 02:01 PM
Last Updated : 08 Oct 2025 02:01 PM
புதுடெல்லி: நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 24 அன்று விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்றும் எச்சரித்தனர்
இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும், நடிகை குறித்த கருத்துகளை திரும்பப் பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. அதேபோல, சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT