Published : 08 Oct 2025 12:29 PM
Last Updated : 08 Oct 2025 12:29 PM
புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், "கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு வசம் கரூர் போலீஸார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தீக்ஷிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், யாஷ் எஸ் விஜய் ஆகியோர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து தவெக சார்பில் ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாரபட்சமாக செயல்படுகிறது.
'சம்பவ இடத்தில் இருந்து கட்சித் தலைவர் விஜய் தப்பி ஓடிவிட்டார்' என்றும், 'நடந்த சம்பவத்துக்கு விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை' என்றும் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. தவெக பேரணியில் பிரச்சினையை உருவாக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நடந்திருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்ரதவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT