Published : 08 Oct 2025 10:06 AM
Last Updated : 08 Oct 2025 10:06 AM
கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் கரூரில் பேட்டியளித்துள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார்.
இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக கரூரில் அருண்ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள். தொடர்ந்து போராடுங்கள். என்று அவருக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களைவிரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT