Published : 08 Oct 2025 06:02 AM
Last Updated : 08 Oct 2025 06:02 AM
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு நாளும் மருத்துவம், உயர்கல்வி அவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
உயர் கல்வியில் தமிழக மாணவர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும், தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில்முனைவோராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் சுய மரியாதையுடன் உயர்கல்வி பயிலவும் ‘புதுமைப் பெண்’. ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் மட்டும் 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் உள்ள தொழில்முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எந்த வகையிலும் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT