Published : 08 Oct 2025 08:27 AM
Last Updated : 08 Oct 2025 08:27 AM

விஜய்யை கைது செய்தால் என்ன நடக்கும்? - நிர்பந்திக்கும் கட்சிகள்... நிதானமாக செயல்படும் அரசு!

கரூர் துயரச் சம்பவத்தின் சுவடுகள் மெல்ல மறைய ஆரம்பித்திருத்தாலும் அதனால் எழுந்த அரசியல் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அது புதுப்புது பரிணாமம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

கரூர் சம்பவத்தில் தவெகவையும் அதன் தலைவர் விஜய்யையும் சற்று காட்டமாகவே சாடிய நீதிமன்றம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கும் சில கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, விஜய் மீது போலீஸ் வழக்குக் கூட பதிவு செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய விசிக தலைவர் திருமாவளவன், “அப்படியானால் விஜய்க்கும் திமுகவுக்கும் உறவா?” என்று எசகுபிசகாய் கேள்வி எழுப்பினார். இதற்கு சுற்றி வளைத்துப் பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன், “யாரையும் நாங்கள் தேவையில்லாமல் கைது செய்யமாட்டோம். விஜய் மீது தவறு என விசாரணையில் தெரியவந்தால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

தீயசக்தி திமுக என மூச்சுவிடாமல் சொல்லி வரும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூட, “கூட்டணிக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு கட்டுப்பட்டு விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் தனது பல ஆண்டு கால அரசியல் அனுபவத்துடன் செயல்படுகிறார்” என்று அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து அதிமுகவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

உண்மையைச் சொல்வதானால் தினகரன் சொல்வதும் சரிதான். கரூர் சம்பவத்தில் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட அவசர, அவசிய நடவடிக்கைகளையே சிலர், ‘எப்படி வந்தார்கள்... ஏன் வந்தார்கள்?’ என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், விஜய் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ‘கட்டுக்கடங்காதவர்கள்’ என்ற பெயர் தாங்கி நிற்கும் தவெகவினர் ஆங்காங்கே தங்கள் சக்திக்கேற்ப ஆட்களைத் திரட்டி முறையற்ற போராட்டங்களில் ‘குதிப்பார்கள்’. அரசியல் கூட்டத்துக்கே எப்படி வரவேண்டும் என்று தெரியாத அவர்கள், அரசியல் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை; அவர்களுக்கு வழிகாட்டவும் ஆளில்லை.

அதனால் அவரவர் தங்களுக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடுவார்கள். கூப்பிடு தொலைவில் தேர்தல் வந்து கொண்டிருப்பதால் இதை சிலர் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும் திருப்பத் துணிவார்கள். ஆபத்து என்று தெரிந்தும் ஆர்ப்பாட்டம் காட்டுவதைக் குறைத்துக் கொள்ளாத விஜய் ரசிகர்கள், விபரீதப் போராட்டங்களை நடத்தியும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள துணியலாம்.

இது எல்லாமே காவல் துறைக்கும் அரசுக்கும் தான் பெரும் தலைவலியாக வந்து நிற்கும். இதையெல்லாம் உணர்ந்தே தான் விஜய் விவகாரத்தில் நிதானப் படிக்கட்டில் நிற்கிறது ஸ்டாலின் அரசு. விஜய்யின் பிரச்சாரப் பேருந்து ஓட்டுநர் மீது கூட நீதிமன்றம் சொன்ன பிறகு தான் வழக்கே பதிவு செய்திருக்கிறது போலீஸ்.

“இத்தனை பேர் பலியாகி இருக்கிறார்கள்... வழக்குக் கூட பதியாமல் என்ன செய்தீர்கள்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதற்காக, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸ், அவர்களைக் கைது செய்யவே அவசரம் காட்டாதபோது, (நீதிமன்றம் உத்தரவிட்டால் தவிர) பனையூர் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டார்கள் - ஏனென்றால் இது தேர்தல் காலம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x