Published : 08 Oct 2025 06:41 AM
Last Updated : 08 Oct 2025 06:41 AM
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர். இதில், புகை மருந்து தெளிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகைகளையும், தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “வடகிழக்குப் பருவமழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், கொசுக்கள் பாதிப்பு மற்றும் மழைக்கால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்.
இந்தக் கூட்டத்தின் மூலம் மக்களுக்குப் பயன்தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மழைக்காலங்களில் வீடுகளைச் சுற்றி தேங்கியிருக்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஏடிஸ் என்ற கொசுக்களை ஒழிக்க வீடு வீடாகச் சென்று, மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து தூய்மைப்படுத்தி வருகிறோம்.
கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு 15,796 டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு, 8 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இணை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT