Published : 08 Oct 2025 07:36 AM
Last Updated : 08 Oct 2025 07:36 AM
‘பிரஸ் மீட் நாயகன்’ என்று பத்திரிகையாளர்களே பட்டம் கொடுக்குமளவுக்கு, எந்தக் கேள்வி கேட்டாலும் தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொல்வதுடன், “வேற கேள்வி ஏதும் இருக்கா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்புபவர் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், எதிர்காலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவரளித்த பேட்டி:
கரூர் சம்பவத்தில் அரசு மீது தவறில்லை. எந்த சதியும் நடக்கவில்லை என்கிறீர்கள். அப்படியானால் ஒரு நபர் ஆணையம், சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை எல்லாம் எதற்கு?
எனக்குத் தெரிந்து கரூர் சம்பவத்தில் ஒரு சதவீதம் கூட சதி கிடையாது. அது ஒரு விபத்து. அதிமுக, தவெக, பாஜக போன்ற கட்சிகள் காவல்துறை மீதும், அரசின் மீதும் குற்றம் சாட்டுவதால் இந்த விசாரணை தேவையாய் உள்ளது. அரசியல் அனுபவம் குறைவான தவெக மீதும் குற்றம் சொல்ல முடியாது. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மிக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் தான் நீதிமன்றம் அவர் மீது கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும் நீங்கள் பாராட்டுவதைப் பார்த்தால் திமுக பக்கம் சாய்வது போல் தெரிகிறதே..?
நான் நடுநிலையாகத்தான் பேசுகிறேன். இதுபோன்று ஒரு அசம்பாவிதம் நடக்கும்போது, அதற்கு அக்கட்சியின் தலைவரைக் கைது செய்தால், தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதை உணர்ந்து முதல்வர் சரியாக நடந்து கொண்டுள்ளார். அரசியலுக்கு இடம் கொடுக்காமல் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.அவருக்கு சவால் விடப்பட்டபோதும், ஆட்சி அதிகாரம் அவர் கையில் இருந்தும், முதல்வர் ஸ்டாலின் நிதானமாக, பெருந்தன்மையுடன் செயல்பட்டு இருக்கிறார். அதேபோல், செந்தில்பாலாஜி மீது காழ்ப்புணர்ச்சியுடன் பழி போடுவதும் தவறானது.
கரூர் சம்பவத்தை வைத்து இபிஎஸ் கூட்டணி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டி இருக்கிறீர்களே..?
தனது பிரச்சாரக் கூட்டத்தில், தவெக கொடிகளைக் காட்டுவது, ஆதரவு போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நரித்தனமான எண்ணத்துடன் கூட்டணிக்காக பழனிசாமி முயற்சிக்கிறார். தவெக – அதிமுக கூட்டணி சேர்வது அவர்கள் விருப்பம். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், 41 உயிர்கள் பலியான இந்த நேரத்தில், நாகரிகம் இல்லாமல், மனதில் ஈரம் இல்லாமல் கூட்டணிக்காக வலை விரிப்பதும், அதற்காக அரசு மற்றும் காவல்துறை மீது பழி சொல்வதும் தவறானது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிடும் என நினைக்கிறீர்கள்?
திமுக தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணி, என்டிஏ கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் சீமான் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளது. சீமான் கூட கூட்டணி அமைக்கிற மனநிலையில் இருப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. இவை இல்லாமல், நீங்கள் எதிர்பார்க்காத புதிய கூட்டணி அமைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் என்டிஏவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். அதேபோல், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல முடியுமா?
உங்களது ஆசை அப்படி இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
அண்ணாமலை அடிக்கடி உங்களை சந்திக்கிறார். பாஜக தலைமை அவர் மூலமாக ஏதேனும் சேதி சொல்லி அனுப்புகிறதோ?
நல்ல நண்பர்களாக இருவரும் சந்தித்துக் கொள்கிறோம். அதில் அரசியல் பேசினாலும், முழுவதும் ‘பிரைவேட்’ தான். என்டிஏவில் நான் நீடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவிப்பார். அவ்வளவுதான்.
நீங்கள் முன்பு அடிக்கடி உச்சரிக்கும் உங்களின் ஸ்லீப்பர் செல்கள் இப்போது பாஜகவிலும் இருக்கிறார்களோ..?
பாஜகவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் செப்டம்பர் 1-ம் தேதி என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். அதைப்பற்றி இப்போது எதற்குப் பேச வேண்டும்?
அதிமுக ஒன்றிணையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?
இப்போது இருப்பது ஏடிஎம்கே அல்ல... இடிஎம்கே. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தொடர்ந்தால் அதிமுக உறுதியாக வெற்றி பெறாது. தேர்தல் வரை பழனிசாமி இருப்பார். அதன் பின் கட்சி அவரை விட்டுப் போய்விடும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் 90 சதவீதம் பேரிடம் உள்ளது. ஆனால், எங்களை எல்லாம் டெல்லி ஒன்றிணைத்து விடும் என்று கனவு கண்டனர். அந்தக் கனவு பலிக்கவில்லை.
கட்சியை ஒருங்கிணைக்க குரல் கொடுத்த செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதே. அவர் உங்களைத் தொடர்பு கொண்டாரா?
செங்கோட்டையன் அவரது முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் அவரிடம் பேசவில்லை. அதேசமயம், நானும் ஓபிஎஸ் ஆகியோரும் இணைந்து செயல்படுகிறோம்.
அண்ணாமலையை மாற்றிவிட்டு நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக நியமித்ததுதான் இந்த குழப்பத்திற்கு காரணமா?
நான் அப்படிச் சொல்லவில்லை. நயினாரை எனக்கு 25 ஆண்டுகளாகத் தெரியும். அவர் பாஜகவில் சேரும்போது கூட என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சேர்ந்தார். பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்ட விஷயத்தில் அவர் சொன்ன பதில் சரியில்லை. எனக்காக தொகுதியை விட்டுக்கொடுத்த ஓபிஎஸ்ஸுக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்? நான் எப்போதும் நயினாருடன் நட்போடு தான் இருக்கிறேன்.
அமமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா அல்லது ஆட்சியைப் பிடிக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறுமா?
ஜனவரி முதல் வாரத்தில் நடக்கவுள்ள கட்சியின் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது. அமமுக இடம்பெறும் அணிதான் வெற்றிக்கூட்டணியாக அமைந்து, ஆட்சியைப் பிடிக்கும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT