Published : 08 Oct 2025 06:34 AM
Last Updated : 08 Oct 2025 06:34 AM
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்பு, பூத் கமிட்டி ஆலோசனை என பல கட்சிகளும் தேர்தலை நோக்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை வகிப்பார் என அமித்ஷா அறிவித்தார். ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து வெளியேறினர். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவும் மாநிலங்களவை சீட் வழங்காததால் கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் பாமகவில் உட்கட்சி பிரச்சினை காரணமாக நிலையற்ற தன்மை உள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தும் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர் மொஹோல் ஆகியோரை பாஜக நியமனம் செய்தது. பைஜெயந்த் பாண்டா இதற்கு முன் 2021-ம் ஆண்டு நடந்த அசாம் சட்டப்பேரவை தேர்தல், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக சார்பில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றிவர். இந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்திலும் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க இவரை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை வந்த தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டர். நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பைஜெயந்த் பாண்டா மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று காலை 10.45 மணி முதல் 11.30 மணி வரை 45 நிமிடங்கள் ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2021 தேர்தலில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டுள்ளதாகவும், குறிப்பாக கடந்த மக்களவை தேர்தலின் போது பாஜக அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகள் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT