Published : 08 Oct 2025 05:57 AM
Last Updated : 08 Oct 2025 05:57 AM
மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அவற்றின் விலையில் மாற்றம் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலை என்பது கச்சா எண்ணெய் விலை, மத்திய அரசின் கலால் வரி, விற்பனையாளர் கமிஷன் மற்றும் மாநில அரசின் வரி உள்ளடங்கியதாகும்.
தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை விலையில் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு 13 சதவீதமாகவும், டீசலுக்கு 11 சதவீதமாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரிய வரி, தற்செயல் தேசிய பேரிடர் வரி, கலால் வரி, கூடுதல் கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி போன்ற வரிகளை விதிக்கிறது.
எனினும், பொதுத்துறை மற்றும் தனியார் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் வழங்கப்படும் ரசீதுகளில் வரிகள் தொடர்பான தகவல் எதுவும் குறிப்பிடுவது இல்லை. 2019-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 9-ல், ஒவ்வொரு நுகர்வோரும் தான் வாங்கும் பொருளின் தரம், அளவு, தன்மை, விலை, வரி போன்றவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும்போது, அதற்கான ரசீதுகளில் அடிப்படை விலை, மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி போன்றவற்றை குறிப்பிட வேண்டும். அந்த விவரங்களுடன் தகவல் பலகை வைக்கவும் எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து, மனுவில் மத்திய, மாநில வரித் துறை அலுவலர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவும், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நவ.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT