Published : 08 Oct 2025 05:34 AM
Last Updated : 08 Oct 2025 05:34 AM
கோவை: கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரைச் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்கு நாளை (அக். 9) திறந்து வைக்கிறார். கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.1,791.23 கோடியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் சிறப்புகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பாலத்தின் ஓடுதள அகலம் 17.25 மீட்டராகும். இதில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தில் அண்ணா சிலை, பீளமேடு, ஹோப் காலேஜ், விமானநிலையம் ஆகிய இடங்களில் ஏறு, இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன. கோல்டுவின்ஸ் அருகே 183 மீட்டர் நீளத்திலும், உப்பிலிபாளையம் அருகே 267 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஹோப் கல்லூரி சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மீது 52 மீட்டர் நீளத்துக்கு, 725 டன் எடை கொண்ட 8 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சப்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பங்களுடன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். மொத்தம் 10 சிக்னல்களைத் தவிர்க்கலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் தனது வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “கடந்த 2020-ல் அறிவிக்கப்பட்டு 2021 மே மாதம் வரை 5 சத வீதம் பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றபின்னர் ரூ.1,791 கோடி செலவில், 10.10 கி.மீ. நீளமுள்ள பாலத்தின் மீத மிருந்த 95 சதவீதம் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவிநாசி சாலை உயர்மட்ட பாலத்தை நாளை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்கு சூட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT