Last Updated : 07 Oct, 2025 12:38 PM

4  

Published : 07 Oct 2025 12:38 PM
Last Updated : 07 Oct 2025 12:38 PM

‘நல்லா சொன்னாரு நமமுக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா’

தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் ஆணையத்துக்கு எக்ஸ்ட்ரா வேலை கொடுக்க புதுப் புதுக் கட்சிகள் புத்துணர்வுடன் பூத்துக் கிளம்பும். அதில் சிலர், தங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்றுகூட திரும்பிப் பார்க்காமல், “அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்” என்று அனாயசமாகச் சொல்வார்கள். அந்த வகையில், தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பானது, ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ (நமமுக) என்ற அரசியல் கட்சியாக அண்மையில் உருமாற்றம் கண்டிருக்கிறது.

மதுரையம்பதியில் இந்தக் கட்சியை அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்த அதன் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, “234 தொகுதிகளிலும் நமமுக போட்டியிட்டு தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக மாறும்” என்று அக்மார்க் அதிரடி கிளப்பினார். அரசியல் பிரவேசம் குறித்து அவரை இன்னும் கொஞ்சம் பேசச் சொன்னோம்.

“எங்கள் கட்சியின் கொள்கையாக மாறுபட்ட புள்ளிகளை எடுத்துள்ளோம். பென்னிகுவிக் மட்டுமே முல்லை பெரியாறு அணையைக் கட்டிவிடவில்லை. அதன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட எத்தனையோ தமிழர்களின் உயிர் தியாகம் வெளியில் வரவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமுளி பகுதியில் கண்ணகிக்கு கோயில் கட்டினர். ஆனால், தமிழக - கேரள எல்லைப் பிரச்சினையைக் காரணம்காட்டி இன்னும் அந்தக் கோயிலை புனரமைக்காமல் வைத்திருக்கிறார்கள்.

ஆட்சியாளர்கள் மத்திய அரசை அணுகி இதற்காக ஏன் முயற்சி எடுக்கவில்லை? கண்ணகி கோயிலை புனரமைக்க வலியுறுத்தி அவர் பிறந்த பூம்புகார் மண்ணில் இருந்து ஜனவரி மாதத்துக்கு முன்னதாக குமுளிக்கு 17 நாள் நீதி யாத்திரை மேற்கொள்ளப் போகிறோம். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதும் எங்களின் எதிர்கால செயல்திட்டம்.

தமிழகத்தில் புதிதாக 5 அணைகளைக் கட்டவேண்டும். அதன் மூலம் விவசாயிகள் தன்னிறைவு பெறவேண்டும். கடலியல் பற்றி நன்கு படித்த மீனவர்களுக்கு கடற்படையிலும் ராணுவத்திலும் முன்னுரிமை அளிக்கவேண்டும். இதுபோன்ற பிரதான கொள்கைகளை முன்வைத்து அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறோம்.

ஜனவரியில் எங்களது கட்சியின் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டம் வைத்திருக்கிறோம். எங்களோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலைச் சந்திப்போம். அது விஜய் கட்சியாகக் கூட இருக்கலாம். ஒருவேளை அப்படி அமையாவிட்டால், 234 தொகுதியிலும் தனித்தே போட்டியிடும் சக்தியும் எங்களுக்கு இருக்கிறது” என்று தெம்பாகப் பேசி முடித்தார் ஜெகநாத் மிஸ்ரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x