Published : 07 Oct 2025 06:23 AM
Last Updated : 07 Oct 2025 06:23 AM
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம், இந்தியா முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் தற்கொலை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-ல் நாடு முழுவதும் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 4,690 பேர் விவசாயிகள். 6,096 பேர் விவசாயத் தொழிலாளர்கள். தொடர்ந்து 2023-ம் ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது.
உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருவதாகவும், வேளாண் உற்பத்தி உயர்ந்து, வேளாண் மகசூல் மும்மடங்கு உயர்ந்திருப்பதகாவும், இதனால் விவசாயிகள் வருமானம் இருமடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் அறிவித்தும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் தொடர்கிறது. பல பருவங்களில் மகசூலில் பாதிப்புகளே அதிகம். அதேபோல் பேரிடர் கால பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடையாது.
வேளாண் கடன்களுக்கு அபராத வட்டி, வேளாண் பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் இல்லை போன்ற பல காரணங்களால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலைக்கு ஆளாகின்றனர். இந்த தற்கொலை கணக்கும் முழுமையானதல்ல. தற்கொலைகள் அரசுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.
பல நேரங்களில் வேளாண் இழப்பால் ஏற்பட்ட தற்கொலையாக காவல்துறையோ, வருவாய்த் துறையோ ஏற்றுக்கொள்வதில்லை. இவற்றை ஆய்வு செய்ய விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகள் மாநில அளவில் தனி குழு அமைத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT