Published : 07 Oct 2025 06:11 AM
Last Updated : 07 Oct 2025 06:11 AM
சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் முதல்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று, வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலுவலகம் சார்பில், பிரதமரின் விக்சித்பாரத் ரோஸ்கர் யோஜனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேவி பிரசாத் பட்டாச்சார்யா தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்வூதியம், காப்பீட்டுப் பலன்கள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் இபிஎஃப்ஒ ஓய்வூதியம், காப் பீட்டுப் பலன்கள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் கூறியதாவது: சென்னை மற்றும் புதுச்சேரியின் மண்டல அலுவலகத்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஒன்றிணைந்து, பிரதமரின் விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனாவை நடத்துகிறோம்.
முக்கியமான தொழில் மையங்கள், கல்வி நிலையங்கள் இருக்கக்கூடிய இடங்களில் இதை நடத்துகிறோம். இதன்மூலம் தொழிலதிபர்கள், அவர்களின் அலுவலர்களை சந்தித்து இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கிறோம். புதிதாக பிஎஃப்-ல் சேரும் ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறோம். முதல்முறையாக வேலைக்கு சேரும் நபர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் (Employment Linked Incentive ) மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான பதிவு கடந்த ஆகஸ்ட் முதல் நடைபெறுகிறது.
புதிதாக வேலைக்கு சேரக்கூடிய நபர்கள் தங்களது ஆதார், யுஏஎன் ஆகியவற்றை இணைத்து, முதல் தவணையாக 6 மாதத்துக்கு பிறகு ரூ.7,500 பெறலாம். ஓர் ஆண்டாக அவர்கள் பணி செய்யும் பட்சத்தில் மீதி இருக்கக்கூடிய தொகை வழங்கப்படும். பிஎஃப் வைப்புத் தொகையை ஏடிஎம் கார்டு மூலமாக எடுக்கும் திட்டம் ஆலோசிக்கப்படுகிறது. பிஎஃப் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 6 வங்கிகள் மூலமாக பென்ஷன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மூலம் பென்ஷன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT