Published : 07 Oct 2025 05:59 AM
Last Updated : 07 Oct 2025 05:59 AM
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், மந்திரா எனும் தனியார் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் செட்டாப் பாக்ஸ்களை வாங்கவும், நல்ல நிலையில் இருக்கும் பாக்ஸ்களை மாற்றவும் நிர்ப்பந்திப்பதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே தொழில் நடத்திவரும் இடங்களில் புதியவர்களுக்கு ஒளிபரப்பு (எல்சிஓ) உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களைத்தான் பொருத்த வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கேபிள் டிவி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் அறிவித்தது.
இதையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று சங்கத்தினர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். சங்கத்தின் தலைவர் சுப.வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் நாகை மாலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசுகையில், ``ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலை உள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் போர்வையில் தனியார் நிறுவனம் அத்துமீறுவதையும், அதற்கு அதிகாரிகள் துணையாக இருப்பதையும் அனுமதிக்க முடியாது. ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நேரடியாக சந்தித்துப் பேச மார்க்சிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும்'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குநர் வைத்திநாதன், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவர் சுப.வெள்ளைச்சாமி, பொதுச்செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் சுப.வெள்ளைச்சாமி கூறுகையில், ``முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி கோரி 4 மாதமாக காத்திருக்கிறோம். அனுமதி கிடைக்காத நிலையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம்.
இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதிதாக ஒளிபரப்பு உரிமம் (எல்சிஓ) வழங்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார். அக்.8-ம் தேதி முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், நாகை மாலி எம்எல்ஏவும் உறுதி அளித்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT