Published : 06 Oct 2025 03:32 PM
Last Updated : 06 Oct 2025 03:32 PM
சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது குறித்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு பெற்றுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவையும் பாதிக்கப்படாமல் கடந்த 50 நாட்களாக நடைபெறும் தொடர் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த செப்டம்பர் 1ம் தேதி போக்குவரத்து அமைச்சர் அழைத்து பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சர் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.
சிஐடியு முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி வியாழக்கிழமை அன்று கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT