Published : 06 Oct 2025 06:09 AM
Last Updated : 06 Oct 2025 06:09 AM
சென்னை: டி.டி.கே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, டி.டி.கே. சாலை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, 200 மீட்டர் நீளத்துக்கு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
அதேபோல், வீனஸ் காலனி 1-வது தெரு. 2-வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1-வது தெரு, சேஷாத்திரி தெரு, முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இத்தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்குத் தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கடரத்தினம் சாலை, ராஜகிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜபுரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டிடிகே சாலை ஆகிய 10 தெருக்களில் மழைநீர் வடிகால்கள் 2.16 கிமீ நீளத்துக்கு ரூ.8.21 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளையும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, எதிர்வரும் பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். பணிகளை மிக விரைந்து முடிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேங்கும் மழைநீரை எல்டம்ஸ் சாலை, சிபி ராமசாமி சாலை, லஸ் சர்ச்சாலை மற்றும் சிஐடி காலனி வழியாக வெளியேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், எழிலன் எம்எல்ஏ, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நெ.சிற்றரசு, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT