Published : 06 Oct 2025 11:02 AM
Last Updated : 06 Oct 2025 11:02 AM
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதயம் தொடர்பான பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “ நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்” என்றார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் கடந்த சில மாதங்களாக குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மேலும், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார் ராமதாஸ்.
அதேபோல, ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் அன்புமணியும் பதிலடி கொடுத்து வந்தார். இந்த சூழலில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி நேரில் சென்று நலம் விசாரித்தது பாமக வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT