Last Updated : 06 Oct, 2025 09:01 AM

2  

Published : 06 Oct 2025 09:01 AM
Last Updated : 06 Oct 2025 09:01 AM

அண்ணன் எப்பவுமே 50 ஆயிரத்தை கவர்ல போட்டு வெச்சிருப்பாரு..! - இது ஆண்டிபட்டி ‘சம்பவம்’

தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்... யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய ஒதுக்க வேண்டி இருக்கும். அதுவும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் பாடு சொல்ல வேண்டியதே இல்லை.

அப்படித்தான், பதவிக்கு வந்த நாளாவே ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜன், வெளியில புறப்பட்டாலே ஐம்பதாயிரத்தை எடுத்து கவர்ல போட்டு அதை பத்திரமா பனியனுக்குள்ள பதுக்கி வெச்சுக்கிட்டுத்தான் கெளம்புவாராம்.

அண்மையில பாருங்க... அதுக்கும் ஆபத்து வந்திடுச்சு. தேனி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆண்டிபட்டியில நடந்துச்சு. அமைச்சர் தங்கம் தென்னரசு தான் கெஸ்ட். கூட்டம் நடந்த தனியார் ஹோட்டலுக்கு அமைச்சர் வந்தப்ப, உடன்பிறப்பு ஒருத்தரு தங்களோட வீட்டுல புதுசா பொறந்த பொறப்புக்கு பேர் வைக்கணும்னு புள்ளைய கொண்டாந்து நீட்டுனாரு.

அந்தப் புள்ளைய வாங்கி அன்பா கொஞ்சி பேரு வெச்ச அமைச்சரு, அப்படியே மகாராஜன் பக்கம் திரும்புனாரு. குறிப்பறிஞ்ச அந்த மனுசன், அவசரமா பனியனுக்குள்ள கையவிட்டு அதுக்குள்ள பதுக்கி வெச்சிருந்த காக்கி கவரை எடுத்து அதுக்குள்ள இருந்து 500 ரூபா தாள் ரெண்ட எடுத்து அமைச்சருக்கிட்ட நீட்டுனாரு.

அத வாங்கி அந்தக் குழந்தைக்கு குடுத்துட்டு அமைச்சரு பாட்டுக்குப் போய்ட்டாரு. அவருக்குப் பின்னாடியே ஓடுன நம்ம மகாராஜன் அண்ணாச்சி, அவசரத்துல கரன்சி வெச்சிருந்த காக்கிக் கவர வழக்கம் போல பனியனுக்குள்ள பதுக்குறதா நெனச்சு பனியனுக்கு வெளியில விட்டுட்டாரு.

அந்தக் கவரு அப்படியே நழுவிப் போயி கீழ விழுந்தத அவரு கவனிக்கல. கரன்சி கவரை காணோம்னு தெரிஞ்சதும் அண்ணாச்சிக்கு எதுவும் சொல்லமுடியல. ஒருவழியா, கூட்டம் முடிஞ்சதும் தனக்கு விசுவாசமான ஒன்றிய செயலாளர்கள் கிட்ட மேட்டரச் சொல்லிருக்காரு. யாருக்கோ பம்பர் அடிச்சிருச்சின்னு நல்லாவே தெரிஞ்சிருந்தும் அண்ணனோட விழுதுகள் சில பேரு அங்க... இங்கன்னு அந்த கவரைத் தேடி ஆக்ட் குடுத்துருக்காங்க.

துப்புத் துலங்கலைன்னதும், “இத சும்மா விடக் கூடாதுண்ணே... போலீஸ்ல ஒரு கம்ளைன்ட குடுத்துடலாம்”னு அடுத்த கட்டத்துக்குப் போயிருக்காங்க. ஆனா, சுதாரிச்சுக்கிட்ட எம்எல்ஏ அண்ணாச்சி, “போனா போகுது விடுங்கப்பா பாத்துக்கலாம்”ன்னு சொல்லி எண்டு கார்டு போட்டுட்டு அடுத்த வேலைய பாக்கப் போயிட்டாரு!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x