Published : 06 Oct 2025 07:35 AM
Last Updated : 06 Oct 2025 07:35 AM
ராமேசுவரம்: ஊனம் தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடல் பகுதியை மாற்றுத் திறனாளி சிறுவன் 9 மணி நேரம் 11 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மப்பிரியா தம்பதியின் மகன் புவிஆற்றல் (12). முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இவர் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாவார்.
2022-ல் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலுடன், மாணவர் புவி ஆற்றல் நீச்சல் பயற்சியைத் தொடங்கினார். 2024-ல் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், நீந்துவதற்கு ஊனம் தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக, இலங்கையில் உள்ள தலைமன்னாரிருந்து தனுஷ்கோடி வரை சுமார் 30 கி.மீ. தொலைவிலான பாக் நீரிணைக் கடலை நீந்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.
உரிய அனுமதி கிடைத்த நிலையில் கடந்த 3-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில்சிறுவனின் பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2.45 மணியளவில் தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கிய சிறுவன் காலை 11.56 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியை வந்தடைந்தார்.
தொடர்ந்து 9 மணி நேரம் 11 நிமிடங்களில் 30 கி.மீ. தொலைவு நீந்தியுள்ளார். இதன் மூலம் மாற்றுத் திறனாளி மாணவர், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை புவி ஆற்றல் படைத்துள்ளார்.
இதற்கு முன் தலைமன்னார், தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை கடல் பகுதியை 2022 மார்ச் 20-ம் தேதி மும்பையை சேர்ந்த, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார். இந்த சாதனையையும் சிறுவன் புவி ஆற்றல் முறியடித்துள்ளார். சிறுவன் புவி ஆற்றலுக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT