Published : 06 Oct 2025 07:16 AM
Last Updated : 06 Oct 2025 07:16 AM
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர்குமார் ஆகியோர், கோயிலுக்குள் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை அக். 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் திருவண்ணாமலைக்கு நேற்று சென்று, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு, அம்மனி அம்மன் கோபுரம் அருகே நடைபெறும் கட்டுமான பணி, கோயில் வளாகத்துக்குள் உள்ள விருந்தினர் இல்லங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர், கோசாலை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “கோயில் வளாகத்துக்குள் நிரந்தர கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது. காத்திருப்பு அறையை போதிய காற்றோட்டத்துடன், மேல் பகுதியில் சீட் அமைத்து, குடிநீர் வசதியுடன் ஏற்படுத்திக்கொடுங்கள். பெரிய கட்டிடம் தேவை இல்லை.
கோயில் வளாகத்துக்குள் கழிப்பறைகள் கட்டக் கூடாது. கோயில் சுவரை எக்காரணத்தைக் கொண்டும் சேதப்படுத்திவிடக் கூடாது. இதுபோன்ற கோயிலை தற்போது அரசாங்கத்தால் கட்ட முடியுமா?” என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
மேலும்,பிரசாதக் கடை கட்டுவதற்காக வைத்திருந்த திட்டத்தைப் பார்வையிட்ட நீதிபதிகள், கோயிலுக்குள் எந்தக் கட்டிடமும் கட்ட கூடாது என்று உத்தரவிட்டனர். ஆய்வின்போது, ஆட்சியர் கா.தர்ப்பகராஜ், மாவட்ட நீதிபதி மதுசூதனன், எஸ்.பி. எம். சுதாகர், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT