Published : 05 Oct 2025 11:04 AM
Last Updated : 05 Oct 2025 11:04 AM
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து வழக்கறிஞர்கள் குழுவுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய தவெக மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தவெக வழக்கறிஞர்கள் பிரிவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாட தவெக தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடனும் விஜய் தீவிர ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா, உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய சப்-ஜுனியர் கூடைப்பந்து போட்டிக்காக டேராடூன் வந்தார். அப்போது விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், “நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மை விரைவில் வரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT