Last Updated : 05 Oct, 2025 12:24 PM

2  

Published : 05 Oct 2025 12:24 PM
Last Updated : 05 Oct 2025 12:24 PM

ஆலங்குடி வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் அரசியல் கட்சிகள்!

ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் காட்டியவர் வெங்கடாசலம்.

புதுக்​கோட்டை மாவட்​டம் வடகாடு கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் அ.வெங்​க​டாசலம். கட்​சி​யால் தனக்கு என்ன பலன் என்று பார்ப்​ப​தை​விட தன்​னால் கட்​சிக்கு என்ன பலன் என்று பார்த்த தனித்​து​வ​மான அரசி​யல்​வா​தி​களில் வெங்​க​டாசல​மும் ஒரு​வர். அதி​முக-​வில் சாமானிய தொண்​ட​னாக இருந்து அமைப்​புச் செய​லா​ளர் வரைக்​கும் உயர்ந்​தவர். புதுக்​கோட்டை மற்​றும் சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த முத்​தரையர் சமூகத்து மக்​கள் வெங்​க​டாசலத்தை தங்​களுக்​கான தலை​வ​னாகவே பார்த்​தார்​கள். முதல் முறை​யாக இவருக்கு 1984-ல் ஆலங்​குடி தொகு​தி​யில் சீட் கொடுத்​தார் எம்​ஜிஆர். அந்​தத் தேர்​தலில் வெற்​றி​பெற்​றாலும் அடுத்து வந்த மூன்று தேர்​தல்​களில் போட்​டி​யிடும் வாய்ப்பை அதி​முக இவருக்கு வழங்​க​வில்​லை.

1996-ல் ஜெயலலிதா தனக்கு ஆலங்​குடி​யில் வாய்ப்​பளிப்​பார் என்று பெரிதும் எதிர்​பார்த்​தார் வெங்​க​டாசலம். ஆனால், இவருக்கு வாய்ப்​பளிக்​க​வில்லை ஜெயலலி​தா. அப்​போது தனது ஆதர​வாளர்களை அழைத்​துக் கருத்​துக் கேட்ட வெங்​க​டாசலம், அவர்​கள் தந்த ஆலோ​சனைப்​படி ஆலங்​குடி​யில் சுயேச்​சை​யாக வேட்​புமனு தாக்​கல் செய்​தார். அந்​தத் தேர்​தலில் பெரு​வாரி​யான இடங்​களை திமுக - தமாகா கூட்​டணி கைப்​பற்​றிய நிலை​யில், ஆலங்​குடியை கைப்​பற்றி அதி​முக தலை​மைக்கு அதிர்ச்சி வைத்​தி​யம் கொடுத்​தார் வெங்​க​டாசலம்.

ஜெயலலி​தாவை பகைத்​துக் கொண்​ட​தால் அவர் இனி அதி​முக பக்​கம் போக​மாட்​டார்; திமுக-​வில் இணைந்​து​விடு​வார் என்​றெல்​லாம் வெங்​க​டாசலம் குறித்து செய்​தி​கள் பரவிய நிலை​யில், எந்​தச் சலன​மும் இல்​லாமல் அமை​தி​யாகவே இருந்​தார். அவரது பொறுமை​யை​யும் மக்​கள் செல்​வாக்​கை​யும் மெச்​சிய ஜெயலலிதா அவரை மீண்​டும் அதி​முக-​வில் சேர்த்​துக் கொண்​டதுடன், 2001 தேர்​தலில் அவரை ஆலங்​குடி​யில் நிற்​க​வும் வைத்​தார்.

இரண்​டாவது முறை​யாக ஆலங்​குடியை வென்​றெடுத்த வெங்​க​டாசலத்தை பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறைக்கு அமைச்​ச​ராக்​கி​னார் ஜெயலலி​தா. ஆனால், அடுத்த தேர்​தலில் அவரால் ஆலங்​குடியை தக்​கவைக்க முடிய​வில்​லை. இந்த நிலை​யில், தனிப்​பட்ட பிரச்​சினை காரண​மாக 2010-ல் எதிரி​களால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார் வெங்​க​டாசலம். அப்​போது புதுக்​கோட்டை மாவட்​டமே கலவரக்​கா​டானது.

அடுத்த ஆறே மாதத்​தில் 2011 சட்​டமன்ற தேர்​தல் வந்​தது. அப்​போது வெங்​க​டாசலத்​தின் மகனுக்கு அதி​முக சீட் கொடுக்​கும் என பலரும் எதிர்​பார்த்​தார்​கள். ஆனால், திருச்​சி​யைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணனை ஆலங்​குடி​யில் நிறுத்​தி​னார் அம்​மா. இதனால் தந்தை வழி​யில் வெங்​க​டாசலத்​தின் மகன் ராஜ​பாண்​டியன் சுயேச்​சை​யாக நின்​றார். ஆனால், தந்தைக்கு இருந்த ஆதரவு மகனுக்கு இல்​லாமல் போன​தால் கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்​றார். இருந்த போதும். அனைத்து தரப்பு மக்​களிட​மும் நெருங்​கிப் பழகிய வெங்​க​டாசலம், முத்​தரையர் சமூகத்து மக்​களின் தனித்த அடை​யாள​மாக மாறிப்​போ​னார்.

ஆண்டு தோறும் அக்​டோபர் 7-ம் தேதி வெங்​க​டாசலம் நினைவு நாளில் வடகாட்​டில் உள்ள அவரது நினை​விடத்​தில் அவரது அபி​மானிகள் தமி​ழ​கத்​தின் பல பகு​தி​களில் இருந்து வந்து அஞ்​சலி செலுத்​து​கி​றார்​கள். இதில், தேர்​தல் கால​மாக இருந்​தால் அனைத்​துக் கட்​சிகளும் போட்​டி​போட்டு வந்து அஞ்​சலி செலுத்​தும். அப்​படித்​தான் இந்த ஆண்​டும் வெங்​க​டாசலத்​துக்கு அரசி​யல் கட்​சிகள் அஞ்​சலி செலுத்​து​வதற்​காக ஃபிளெக்​ஸ்​கள், பேனர்​கள் சகிதம் தயா​ராகிக் கொண்​டிருக்​கிறது வடகாடு.

இது குறித்து நம்​மிடம் பேசிய வெங்​க​டாசலத்​தின் ஆதர​வாள​ரும் அதி​முக ஒன்றி இலக்​கிய அணி செய​லா​ள​ரு​மான முத்​து​மாணிக்​கம் “அதி​முக-வை தனது சொந்​தக் கட்சி போலவே பாவித்து வந்​தவர் வெங்​க​டாசலம். சுயேச்​சை​யாக நின்று வென்ற போது கூட அவர் இன்​னொரு கட்​சிக்​குப் போக​வில்​லை. புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் மட்​டுமில்​லாது பிற மாவட்​டங்​களி​லும் அவருக்​கான அரசி​யல் இருந்​தது.

தனது எளிமைக்​காகத்​தான் மறைந்த பிறகும் அவர் போற்​றப்​படு​கி​றார். அவரால் பலபேர் அரசி​யலில் உயர்ந்த நிலைக்கு சென்​றுள்​ளனர். அதனால் தான் அவரது நினைவு நாளில் இளைஞர்​கள் இங்கு அதி​கள​வில் குவி​கின்​ற​னர். அவரை ஒதுக்​கி​விட்டு அரசி​யல் செய்​ய​முடி​யாது என்​ப​தால் தான் தேர்​தல் காலத்​தில் அரசி​யல் கட்​சிகள் போட்டி போட்​டுக்​கொண்டு ஆலங்​குடிக்கு வரு​கின்​றன” என்​றார்.

எம்​ஜிஆர் விசு​வாசி​யான வெங்​க​டாசலம், ‘வாழ்​ந்​​தா​லும் மறைந்​​தா​லும் பேர் சொல்ல வேண்​டும்​... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்​டும்’ என்​பது போலத்​​தான் வாழ்​ந்​துவிட்​டுப் போயிருக்​கிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x