Published : 04 Oct 2025 07:56 PM
Last Updated : 04 Oct 2025 07:56 PM
ஈரோடு: உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோம் என அறிவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.
அதற்கு பதிலாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஒன்றியத்தில் 35-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில், நம்பியூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய பொருளாளராக கடத்தூர் ஆ.செங்காளிபாளையத்தை சேர்ந்த எஸ்.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கடந்த மே மாதம் 12-ம் தேதி இறந்து விட்டார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியில் யார் உயிருடன் இருக்கிறார்கள், இறந்து விட்டார்கள் என்பது தெரியாத நிலையில் கட்சியின் செயல்பாடு உள்ளது என அதிமுகவினர் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜிடம் கேட்டபோது பார்க்கலாம் என பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT