Published : 04 Oct 2025 03:05 PM
Last Updated : 04 Oct 2025 03:05 PM
வேலூர்: 'நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம். எனவே வீண் பயத்தோடு அவர்கள் உளறிக் கொண்டிருக்க தேவையில்லை' என கரூர் சம்பவத்தில் விஜய் கைது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரை முருகன், “ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சித் தலைவர் போல செயல்படுகிறார். ஒரு ஆளுநருக்குரிய கண்ணியத்தையும், அந்தஸ்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தரம் தாழ்ந்து பேசுகிறார். எனவே அவரை நாங்கள் ஆளுநராக மதிப்பதும் இல்லை, அவர் குறித்து பேசுவதும் இல்லை.
கரூர் சம்பவம் குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீதியும் இருக்கிறது, கோபமும் இருக்கிறது, இரக்கமும் இருக்கிறது, கடுமையும் இருக்கிறது.” என்று கூறினார்
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம். எனவே வீண் பயத்தோடு அவர்கள் பினாத்திக்கொண்டிருக்க தேவையில்லை.
விஜய் வாகனத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. அது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடந்து வருகிறது. இதில் எப்போது தேவையோ அப்போது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
எல்லாக் கட்சிகளுக்கும் தங்களுக்கு எவ்வளவு கூட்டம் வருமென்று தெரியும். அந்த கூட்டத்துக்கு ஏற்ப நிகழ்ச்சி நடத்தும் இடம் போதுமானதா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அதிக கூட்டம் வரும் என்றால் ஏதாவது ஒரு மைதானத்தில் கூட்டம் வைத்திருக்கலாம். எனவே ஒவ்வொரு கட்சியும், அவர்களின் நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும்.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்வது என்று நாங்கள் ஒரு கமிட்டி போடப் போகிறோம். அரசும் ஒரு குழு அமைக்க உள்ளது” என்றார்.
இதற்கு திமுகதான் காரணம் என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “நாங்கள் காவல்துறை பாதுகாப்பு போட்டுள்ளோம், விதிமுறைகளை வெளியிட்டு எப்படி நடந்துகொள்ள வேண்டுமென சொல்லியுள்ளோம். எங்கள் மீது குற்றம் சொல்ல என்ன இருக்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் நாங்கள் செய்யவில்லை.
எந்த கட்சியும் எங்களை பயமுறுத்த முடியாது. ஏனென்றால் திமுக எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம். யார் எந்த வேஷம் போட்டாலும், யார் எந்த அணியில் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் வெற்றிபெறுவோம். கரூர் சம்பவம் மூலம் ஒண்டிக்கொள்ள ஓர் இடம் கிடைக்குமா என பாஜகவினர் பார்க்கிறார்கள்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT