Published : 04 Oct 2025 09:43 AM
Last Updated : 04 Oct 2025 09:43 AM
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு வசம் கரூர் போலீஸார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
யார் இந்த அஸ்ரா கார்க்? - அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழகப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட இவர் முதன்முதலில் ஏற்றுக் கொண்ட பொறுப்பு திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர். 2008-ல் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆனார். கந்துவட்டிக் கொடுமையால் சிக்கித் தவித்த நெல்லையில் அவரது நடவடிக்கைகள் அதிரடியாக அமைந்தது.
அதன்பின்னர் 2010-ல் அவர் மதுரை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார். கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார் வழக்குகளை அவர் கையாண்ட விதம் அவர் மீது கவனத்தைத் திருப்பியது. 2016-ம் ஆண்டு மத்திய பணிக்குச் சென்றார். பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் பதவி உயர்வோடு தமிழகத்துக்கே வந்தார். 2022-ம் ஆண்டு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருக்கிறார். நேர்மை, துணிச்சலுக்கு பெயர்பெற்ற அஸ்ரா கார்க் காவல்துறையின் பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அமைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT