Published : 04 Oct 2025 06:27 AM
Last Updated : 04 Oct 2025 06:27 AM
சென்னை: இரண்டு தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை, 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து, அம்ரித் பாரத் ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ உட்பட பல்வேறு வகைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில், முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை ஐ.சி.எஃப். ஆலைக்கு வந்தது. இந்த வந்தே பாரத் ரயிலில், 16 ‘ஏசி’ பெட்டிகள் இருக்கின்றன. பயணிகளை கவரும் வகையில் ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு, இந்த தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எஃப். ஆலையில் இருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டது. 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தூங்கும் வந்தே பாரத் ரயில் இன்னும் பயன்பாட்டுக்கு வராதது, பயணிகளிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் இந்த ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பயணிகளை வெகுவாக கவரும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ. வரை வேகமாக செல்லும் திறன் கொண்டது. பயணிகள் வசதிக்காக, ரயில் பெட்டியின் உள்பகுதியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது.
நீண்ட துாரம் செல்லும் தடத்தில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாராக உள்ளது. 2-வது ரயில், தயாரிப்பு பணியும் முடிந்து, அக். 15-க்குள் வந்து விடும். எனவே, இரண்டு வந்தே பாரத் ரயில்களும் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT