Published : 04 Oct 2025 05:59 AM
Last Updated : 04 Oct 2025 05:59 AM

கரூருக்கு விரைந்த ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: ‘ஒரே இரவில் கரூருக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், சிவகங்கைக்கு இன்றுவரை செல்லாதது ஏன்?’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: “இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும், வாய் கூசாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார்.

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் மக்கள் அவதி யுற்றபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்துக்கு ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு, யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ, போலி நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அவசியமோ இல்லை.

ஒரே இரவில் கரூருக்கு விரைந்த நீங்கள், கள்ளக்குறிச்சிக்கும் வேங்கைவயலுக்கும் சிவகங்கைக்கும் இன்று வரை செல்லாதது ஏன்? அங்குள்ள மக்களின் கண்ணீரைவிட கரூர் செல்வதனால் ஏற்படும் அரசியல் ஆதாயம்தான் தங்களுக்குப் பெரிதாகி விட்டதல்லவா? ஓட்டுக்காக கரூரில் போட்டோஷூட் நாடகமாடும் திமுகவினருக்குக் கரூரில் மக்கள் துயரைப் போக்க விரைந்த மத்திய அரசைக் குறைகூற எந்தத் தகுதியும் இல்லை.

எவ்வளவு போலி குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், முன்னேற்பாடுகளும் முறையான திட்டமிடலும் இல்லாமல் கரூரில் 41 அப்பாவி உயிர்களைப் பலியிட்டதால் நேர்ந்த ரத்தக்கறை திமுக அரசின் கைகளில் இருந்து என்றும் அகலாது. மக்களை வதைத்து மீண்டும் ஆட்சி ஏறும் தங்கள் பகல் கனவும் என்றும் பலிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x