Published : 04 Oct 2025 05:43 AM
Last Updated : 04 Oct 2025 05:43 AM

ம.பி.யில் குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய தடை

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரண்டு இருமல் மருந்துகளை அக் குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச உணவு, மருந்து கட்டுப்பாட்டுத்துறை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் எஸ்.குருபாரதி வெளியிட்ட அறிக்கை: மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் உள்ளிட்ட 5 மருந்துகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. மற்ற 4 மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை. ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், டை எத்திலீன் கிளைசால் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதனால், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்துக்கு பிறகு அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x