Published : 03 Oct 2025 09:04 PM
Last Updated : 03 Oct 2025 09:04 PM

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆதவ் அர்ஜுனா | கோப்புப் படம்

சென்னை: சமூக வலைதளத்தில் புரட்சியை ஏற்படுத்துவது போன்று பதிவிட்டுள்ள தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது.

தேச பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு செல்லத்தக்கதல்ல என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆதவ் ஆர்ஜுனாவின் எக்ஸ் தள பக்க பதிவுகளும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ‘ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற் பட்டவர்களா ? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை காத்திருக்கிறதா? புரட்சி ஏற்படுத்துவதுபோல கருத்துகளை பதிவிட்டு ள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல் துறை கவனத்துடன் வழக்குப் பதிவு செய்து, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x