Published : 03 Oct 2025 05:32 PM
Last Updated : 03 Oct 2025 05:32 PM
திருச்சி: “கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான தவெக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். விஜய்யை இதுவரை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளதில் நியாயம் உள்ளது. கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் தலையிடுகிறார்கள் என்பதற்காக யாரையும் தப்பிக்க விட்டுவிடக் கூடாது. தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
சம்பவம் நிகழ்ந்த உடனேயே அங்கிருந்து விஜய் சென்றுவிட்டார். அவருக்கு பின்னால் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் சென்றுவிட்டனர். உங்கள் விஜய் உங்களை பார்க்க வருகிறேன் எனக் கூறி நீங்கள் அழைத்ததன் பேரில் தானே உங்கள் ரசிகர்களும், பொது மக்களும் அங்கே வந்தனர். அவர்கள் அங்கு செத்து மடிந்து கிடக்கும் போது சக மனிதனாக அவர்களின் கவலையை பகிர்ந்து கொள்ளாமல் நீங்களும் உங்கள் கட்சி நிர்வாகிகளும் பத்திரமாக எவ்வாறு வீடு திரும்பினீர்கள் ?
இந்தச் சம்பவத்துக்கு விஜய் மற்றும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல வீடியோ வெளியிடுவதை ஏற்க இயலாது. விஜய்யின் வீடியோ பதிவு வில்லனிடம் நையாண்டி பேசுவதுபோல உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கும் எங்கள் கட்சிக்கு கூட ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி வழங்குவதில்லை. ஆனால், விஜய் கூட்டத்துக்கு கேட்ட இடத்தை ஐபிஎஸ் அதிகாரிகள் ஒதுக்குகிறார்கள். இதில் இருக்கும் சூட்சமத்தை அறிந்துகொண்டு முதல்வர் உஷாராக இருக்க வேண்டும்” என்று வேல்முருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT