Last Updated : 03 Oct, 2025 04:24 PM

17  

Published : 03 Oct 2025 04:24 PM
Last Updated : 03 Oct 2025 04:24 PM

“அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளார்” - அப்பாவு விமர்சனம்

திருநெல்வேலி: "அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு விஜய் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்" என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டிகளை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திலுள்ள செயற்கை இழை மைதானத்தை புனரமைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமிழக முதல்வர் எந்த ஒரு காரியத்தையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என செய்ய மாட்டார். கரூர் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உறக்கமில்லாமல் நள்ளிரவில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார். வேண்டுமென்றே விஜய் சதி செய்து காலதாமதத்தை ஏற்படுத்தி கரூர் வந்ததாலேயே இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது.

19 அடி அகலம் உள்ள சாலையில் 12 அடி அகலம் உள்ள பேருந்தில் அவர் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நெருக்கடி உருவாகி, உயிரிழப்புகள் ஏற்பட்டன. விஜய் வரும்போதே 10 ஆயிரம் பேரை உடன் அழைத்து வருகிறார். கரூரில் உள்ளூர் மக்கள் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் முண்டியடிக்கும் சூழல் உருவானது. பிரச்சாரப் பகுதிக்கு காலதாமதமாக வந்த விஜய் 7 நிமிடம் ஷூட்டிங் முடித்துவிட்டு 41 பேர் உயிரைக் குடித்துவிட்டு தனி விமானம் ஏறி சென்று பனையூரில் பதுங்கி விட்டார்.

கூட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்சியின் தலைவன் நேரடியாக சென்று மக்களை சந்தித்திருக்க வேண்டும். கட்சி கூட்டத்தில் நடந்த நிகழ்வுக்கு அவரது கட்சிக் கொடியை அரைக் கம்பத்திலாவது பறக்கவிட்டு இருக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பின்னர் அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து விட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக காணொளி ஒன்றை வெளியிட்டார்.

50 வயதில் விஜய் தான் அங்கிள். ஆனால் அவர் எல்லாரையும் அங்கிள் அங்கிள் என சொல்லி வருகிறார். சினிமாவில் ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொண்டிருந்த விஜய், அமித் ஷாவிடம் அரசியலில் நடிக்க ஒப்பந்தம் போட்டு கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். திமுகவுக்கு எந்தக் கட்சிக்கும் ரகசிய தொடர்பு இருந்தது கிடையாது.

நடிகர் விஜய்யை எனக்கு பிடிக்கும். அவரது காமெடிகளை ரசித்து பார்ப்பேன். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்துக்கும் திமுகவுக்கும் நேரடி தொடர்புள்ளது. கரூர் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், அவரை வழி நடத்தியவராக இருந்தாலும், இந்த அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும்” என்று அப்பாவு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x