Last Updated : 03 Oct, 2025 01:33 PM

3  

Published : 03 Oct 2025 01:33 PM
Last Updated : 03 Oct 2025 01:33 PM

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி; தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டங்களுக்கு தடை

மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கதிரேசன், கரூர் தாந்தோணிமலை தங்கம் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். நெல்லையைச் சேர்ந்த பிரபாகர பாண்டியன், நெல்லை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்தார். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஜி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஜி.எஸ்.மணி, ரவி, செந்தில்கண்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், வீராகதிரவன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசு பிளீடர் திலக்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் ரவி, அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர்.

அரசு தரப்பில் வாதிடுகையில், “கரூர் கூட்டத்துக்கு தவெக தலைவர் விஜய் பகல் 12 மணிக்கு வருவதாக கட்சி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் விஜய் 4 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு தான் வந்தார். அவரை பார்ப்பதற்காக காலையிலிருந்து கூடிய மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சோர்வடைந்தனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. போலீஸ் தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் தரப்பில், “தேசிய நெடுஞ்சாலை அருகே தவெக கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரசு தரப்பில், “கரூர் வேலுச்சாமிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அனுமதி கோரப்பட்டது. அது தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. சாலையின் வடக்கு பகுதியில் கூட்டம் நடத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி கடிதத்திலும் அப்படித் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் இடம்தான்” எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “எந்தக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் கூட்டங்களில் பங்கேற்போர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது அவசியம். பொதுமக்களின் நலனே பிரதானம். மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும். மக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை” என்றனர்.

தொடர்ந்து அரசுத் தரப்பில், “தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் அதிக கூட்டம் கூடி நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டியது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் அரசு தயாராக உள்ளது” எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “கட்சிகள், அமைப்புகளின் கூட்டங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதே கோரிக்கையுடன் இங்கு மனுத் தாக்கல் செய்திருப்பவர்கள் அந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேரலாம்.

அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கும் வரை தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட எந்த கட்சியாகவும், அமைப்பாகவும் இருந்தாலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கும்போது குடிநீர், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.

சிபிஐ கோரிய மனுக்கள் தள்ளுபடி: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், கூடுதல் இழப்பீடு கோரிய மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதை கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய போலீஸாரே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. போலீஸ் விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. சிபிஐ விசாரணை கோரும் மனுதாரர்களுக்கும் கரூர் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. மனுதாரர்கள் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x