Last Updated : 03 Oct, 2025 11:36 AM

32  

Published : 03 Oct 2025 11:36 AM
Last Updated : 03 Oct 2025 11:36 AM

‘கரூர் துயரத்தில் யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி’ - முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம்: 'தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா எனப் பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், பல திட்டங்களை தொடங்கிவைத்தும் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மீனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை இலங்கை கடற்படையின் தாக்குதல்தான். இதனை நாம் தொடர்ந்து கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். ஆனால், ஒன்றியத்தை ஆளும் பாஜக மீனவவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.

கச்சத்தீவை மீட்பதே மீனவர் நலனை காக்க உதவும் என தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதனை வைத்து இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அதனை செய்யக்கூட ஒன்றிய அரசு மறுக்கிறது. இலங்கை சென்ற இந்திய பிரதமரும் இதனை வலியுறுத்த மறுக்கிறார்.

கச்சத்தீவை தர மாட்டோம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. தமிழக மீனவர்கள் என்னால் இளக்காரமாக போய்விட்டதா? நாங்கள் இந்தியர்கள் இல்லையா?. தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது. தமிழகத்தின் மீது ஏன் இவ்வளவு வன்மைத்தை காட்டுகிறார்கள். ஜிஎஸ்டி, நிதிப்பகிர்வில் ஓரவஞ்சனை, சிறப்பு திட்டங்கள் அறிவிக்காதது, பள்ளிக்கல்விக்கான நிதியை மறுப்பது, நீட், தேசிய கல்விக்கொள்கை, கீழடி அறிக்கைக்கு தடை, தொகுதி மறுவரையறை என பாஜக அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை செய்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணைக்குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள்.

இது தமிழ்நாட்டின் மீதுள்ள அக்கறை அல்ல. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே, இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது. மாநில நலன்களை பறித்து, மாநிலங்களே இருக்க கூடாது என செயல்படும் பாஜகவோடு கூட்டணி வைத்து அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. இந்த கூட்டணிக்கு ஏதாவது கொள்கை உள்ளதா?.

ஊர் ஊராக சென்று தங்கள் கூட்டணி யாராவது வருவார்களா என பழனிசாமி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மைக் கிடைத்தால் போதும் என்று எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டில் அவர்களின் செயல்திட்டத்தை வேகப்படுத்தியுள்ளனர். அவர்களை எதிர்க்கும் பணி அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியிலும் தொடரும்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x