Published : 03 Oct 2025 05:56 AM
Last Updated : 03 Oct 2025 05:56 AM
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தடுத்து வைத்துக் கொண்டு, கல்வியை அரசியல் செய்வதாக தெலுங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கத்தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பரிசுகளை வழங்கி பேசியதாவது: பிரதமர் மோடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நாட்டிற்குச் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தடுத்து விட்டனர். நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது நவோதயா பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்தான். அங்கிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே கல்வியை அரசியலாக்கி, தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே
நவோதயா போன்ற பள்ளிகளைத் தடுத்துவிட்டனர். புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றியுள்ளோம்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்று கூறிவிட்டு, ஒரு சாராருக்கு நல்ல கல்வியையும், சாமானியப் பிள்ளைகளுக்கு அதனைக் கொடுக்காமலும் உள்ளனர். ஆனால், கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என விளம்பர நிகழ்ச்சி மட்டுமே நடத்துகின்றனர். டெல்லிக்கு யார் வேண்டுமானா லும் போகலாம். டெல்லிக்குச் சென்றாலே பாரதிய ஜனதா கட்சியின் பின்னணியில் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
கரூர் விவகாரத்தில் விஜய் கட்சிக்கு கொடுக்கப்பட்ட இடம் மிகக் குறுகிய இடம் என்று அனைவரும் கூறுகின்றனர். ஒரு நபர் ஆணையம் அமைத்து விட்டு அரசு சார்பில், அமைச்சர் தரப்பில் என்று ஆளாளுக்கு பேட்டி கொடுக்கின்றனர்.
பிறகு, அந்த விசாரணை ஆணையம் எதற்கு? இந்த விவகாரத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் செந்தில் பாலாஜி போன்றவர்களின் பவர் கட் ஆகும். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாஜக விசாரணை நடத்த வந்தால் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் பதறுகின்றனர். உண்மை விவகாரம் வெளியே வந்துவிடும் என்ற அச்சம்தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT