Published : 03 Oct 2025 05:56 AM
Last Updated : 03 Oct 2025 05:56 AM
சென்னை: தமிழக அரசின் ஓய்வூதியக்குழு இடைக்கால அறிக்கை அளித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலக பணியாளர்கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, அரசின் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வழங்காமல், அதே தேதியில் இடைக்கால அறிக்கையை அளித்துள்ளது.
இது சட்டப்பேரவை அறிவிப்பை மீறும் செயல். கால நீட்டிப்பு குறித்து அரசிடம் நேரடியாக கோராமல், மறைமுகமாக கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
இடைக்கால அறிக்கை அளித்ததன் மூலம் ஓய்வூதியக்குழு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலக பணியாளர்கள் அக்.6-ம் தேதி திங்கள்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள். முதல்வர் இந்த விஷயத்தின் தீவிரத்தை மனதில் கொண்டு, உடனடியாக தலையிட்டு, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT