Published : 03 Oct 2025 06:14 AM
Last Updated : 03 Oct 2025 06:14 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக கொடுங்கையூர் வளாகத்தில் குப்பைகள் அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதை பயோமைனிங் முறையில் ரூ.641 கோடியில் பிரித்தெடுத்து அகற்றும் பணிகள், 6 தொகுப்புகளாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66.52 லட்சம் டன் ஆகும். அதில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தொகுப்பு 1 மற்றும் 2-ன் வாயிலாக சுமார் 3 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அதில் மாநகராட்சி சார்பில் ரூ.57 லட்சத்தில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1,500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT