Published : 03 Oct 2025 08:53 AM
Last Updated : 03 Oct 2025 08:53 AM

கரூர் நெரிசல் உயிரிழப்பு தொடர்பான மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இன்று விசாரணை

மதுரை: கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் கதிரேசன், தங்கம், ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதுதவிர, கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கரூர் சம்பவம் தொடர்பான பொதுநல மனுக்கள், தவெக நிர்வாகிகளின் முன்ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் தசரா விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. பொது நல மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்படும். அமர்வுப் பணி முடிந்ததும் நீதிபதி ஜோதிராமன் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x