Published : 03 Oct 2025 08:14 AM
Last Updated : 03 Oct 2025 08:14 AM
தருமபுரி: அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். தருமபுரியில் நேற்று பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தராததுதான் காரணம்.
அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், கரூர் சம்பவத்துக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் கேள்விகளுக்கும் அவர்தான் பதில் கூற வேண்டும். தற்போது ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியுள்ளது.
அவர்களின் விசாரணை முடிவை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது ஏன்? கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக-வுக்கு பல கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது திமுக அரசு எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் செய்கிறது. ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்று ஆடினால் காணாமல் போய்விடுவீர்கள்.
தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என கூறும் முதல்வர் ஸ்டாலின், கரூர் சம்பவத்தின் மூலம் தேசிய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார். விசிக, இடதுசாரி கட்சிகள் மனசாட்சியை இழந்து விட்டனர். திருச்சி, விழுப்புரத்தில் அவர்கள் மாநாடு நடத்த அனுமதி கேட்ட இடத்துக்கு திமுக அரசு அனுமதி தரவில்லை என்று அப்போது குற்றம்சாட்டினர். ஆனால், தற்போது கரூர் சம்பவத்தில் அரசுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
டாஸ்மாக்கில் ரூ.10 முறைகேடு மூலம் பல்லாயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதேபோல, திமுக ஆட்சியில் முடக்கிவைத்துள்ள திட்டங்கள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்படும். அதற்கு பொதுமக்கள் அதிமுக-வை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கூட்டம் தொடங்கும்போது கரூர் சம்பவத்துக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், முல்லைவேந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT