Published : 03 Oct 2025 08:04 AM
Last Updated : 03 Oct 2025 08:04 AM
திருச்சி: விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் நேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழிபோட முயற்சிக்கிறார் தவெக தலைவர் விஜய். அவர் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அல்லது ஆபத்தானவர்களிடம் சிக்கி இருக்கிறார்.
கரூர் விவகாரத்தில் விஜய் மீது தமிழக காவல் துறை ஏன் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை? தமிழக அரசும், காவல் துறையும் அச்சப்படுகிறதா? தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் ரகசியத் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய் கூறி வந்த நிலையில், அவரைக் காப்பாற்ற பாஜக ஓடோடி வருகிறது. திமுக அரசையும், கூட்டணிக் கட்சிகளையும் பலவீனப்படுத்த விஜய் களமிறக்கப்பட்டுள்ளார். அரசியல் ஆதாயம் தேடுவதும், தமிழக முதல்வரை சீண்டுவதும்தான் அவரது நோக்கமாக இருக்கிறதே தவிர, கரூர் சம்பவம் குறித்து அவருக்கு சிறிதும் கவலை இல்லை.
ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கக்கூடிய விஜய்யின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் எப்போதும் இணைய மாட்டார். அவரது நோக்கம் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் பிரிக்க வேண்டும் என்பதுதான்.
பாஜக அனுப்பியதுபோல, காங்கிரஸ் கட்சியும் உண்மை அறியும் குழுவை அனுப்பிவைத்து, கரூர் சம்பவத்தின் உண்மை நிலையை வெளி உலகுக்கு உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT