Published : 02 Oct 2025 05:03 PM
Last Updated : 02 Oct 2025 05:03 PM
சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை.
மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்?
வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய் இப்படி தான் பேசியிருக்க வேண்டும் என சீமான் பேசி காட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT