Last Updated : 02 Oct, 2025 02:14 PM

8  

Published : 02 Oct 2025 02:14 PM
Last Updated : 02 Oct 2025 02:14 PM

“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன்

சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.

இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது.

ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார். மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார். கரூர் துக்க சம்பவம் நடந்த அடுத்த நாளாவது, விஜய் ஓர் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கலாம். அஞ்சலியாவது செலுத்தி இருக்கலாம் அல்லது பத்திரிக்கையாளர்களையாவது சந்தித்திருக்கலாம்.

விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை கூறிய பிறகு ஒரு வீடியோவை வெளியிடுகிறார். விஜய்க்கு தனது தொண்டர்கள், ரசிகர்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது. இப்படி நடந்ததற்கு திமுக தான் காரணம், முதல்வர் தான் காரணம் எனக் கூறி பழிபோட பார்க்கிறார்கள். உங்களது, தொண்டர்கள் அளவு கடந்து ஒரு இடத்தில் கூடுகிறார்கள், ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி மிதித்து தானே இறந்தார்கள். யாராவது மயக்க மருந்து தெளித்தார்களா, கல் எறிந்தார்களா? இது குறித்த ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

இந்த விஷயத்தில் ஆதாயம் தேடத்தான் விஜய் ஆவலாக இருக்கிறாரே தவிர, மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் ஆர்வமாக இல்லை. இவை எல்லாம் அவரது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததைப் போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தான் கட்டாயப்படுத்தினார்கள். இதை நாம் காலப்போக்கில் தெரிந்து கொண்டோம். அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக அவர், கட்சி தொடங்குவதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதவி, அதிகாரம் மீதெல்லாம் மோகம் இல்லை. ஆனால் விஜய்க்கு அதிகாரத்தின் மீதுதான் மோகம். அடுத்த முதல்வராக ஆட்சியில் உட்கார வேண்டும் என குறிவைத்து, திமுகவை கடுமையாக சாடி வருகிறார். விஜய் கருத்தியல் சார்ந்து எதுவுமே பேசவில்லை.

தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் கூறவில்லை. திமுவை தான் மாறி மாறி விமர்சிக்கிறார். இதுபோன்ற பல நபர்களை ஆர்எஸ்எஸ் இறக்கி விட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x