Published : 02 Oct 2025 12:18 PM
Last Updated : 02 Oct 2025 12:18 PM
ஊட்டி: கரூர் சம்பவத்தில் சில கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றனர். இது அரசியல் பிழை என ஊட்டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
‘வாக்கு திருட்டை’ கண்டித்து இந்தியா முழுவதிலும், காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதிலுமே தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராகுல் காந்தி தலைமையில் கரூர் மாவட்டத்துக்கு குழு அனுப்ப திருமாவளவன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால், பாஜக குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குழு அமைத்துள்ளனது. தமிழக அரசு ஓர் ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையம் நீதிபதி அருணா தலைமையில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அதன் முடிவு வரட்டும்.
பாஜக குழு உண்மை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும். அரசியல் செய்யக் கூடாது. ஹேமா மாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, அரசியல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமா மாலினியும், அனுராக் தாக்கூரும் திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். போலீஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை இல்லையென்றால், அன்றைய தினம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். காவல்துறையினர் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. காவல்துறையினர் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டனர்.
பாஜக, பிணத்தின் மீது அரசியல் செய்யக் கூடாது. பிணத்தின் மீது அரசியல் செய்யும் கட்சிகளை பொதுமக்கள் உமிழ்கின்றனர்.
ஒரு பக்கம் வாக்கு திருட்டு, இன்னொரு பக்கம் பிணத்தின் மீது அரசியல். அரசியலில் அனுதாபங்கள் இருக்க வேண்டும். கரூரில் நிகழ்ந்த துயரின் ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் வீட்டில் இது போன்று சம்பவம் நடந்தால், அரசியல் செய்வார்களா?. அவர்களின் கொடூரமான முகங்கள் இதன்மூலம் தெரிகிறது.
கரூர் மக்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர். இரவோடு இரவாக ஆணையம் அமைத்து, விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலிலும் செலுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
ஏன், அமைச்சர்களை அனுப்பி வைத்து விட்டு, முதல்வர் வீட்டோடு இருந்திருக்கலாமே. ஆனால், அப்படிச் செய்யாமல், சம்பவம் நடந்தவுடன், துரிதமாக செயல்பட்டார். முதல்வரை பாராட்ட மனது இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும்.
ஹேமா மாலினி தலைமையில் அமைக்கப்பட்டள்ள உண்மை கண்டறியும் குழு போன்றதொரு குழு ஏன், கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடந்தன. அப்போது, அங்கு இந்த உண்மை கண்டறியும் குழு அமைத்து அனுப்பியிருக்க வேண்டும் தானே.
அதை விட்டுவிட்டு, பிணத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய சில கட்சிகள் துடித்துக் கொண்டிருக்கிறன. இது போன்று பிணத்தை வைத்து சில கட்சித் தலைவர் அரசியல் செய்வது, அரசியல் பிழை.
ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி தொகையை விடுவித்துள்ளது. ஆனால், அதிகம் வரி வசூலித்துக் கொடுக்கும் தமிழகத்துக்கு மிகவும் குறைந்த அளவிலான ஜிஎஸ்டி தொகையை விடுவித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழக அரசு முதல் மாநிலமாக உள்ளது. ஜிடிபி.,யில் ஒன்றிய அரசை விட தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. உழைப்பு எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பு. ஆனால், அனைத்து வரிப்பணத்தையும் எடுத்து பிற மாநிலங்களுக்கு கொடுக்கிறது. இது நியாயம் இல்லை, என்றார்.
முன்னதாக நடந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில், ஊட்டி எம்எல்ஏ., மற்றும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.கணேஷ், மாநிலச் செயலாளர் நாகராஜ் உட்பட பலர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT