Published : 01 Oct 2025 07:56 AM
Last Updated : 01 Oct 2025 07:56 AM
கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்து, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார்.
அதன்படி, ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வந்தனர். அவர்கள், வேலுசாமிபுரத்தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவர்கள் கூறுவதைக் கேட்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சியினர் சரியான இடங்களை தேர்வு செய்யவேண்டும்.
மிகவும் குறுகிய இடத்தில் 30 ஆயிரம் பேர் கூடியுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? காவல் துறை என்ன செய்தது? நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்ன செய்தார்கள் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மிகக் குறுகிய சாலையில் அனுமதி வழங்கியது தவறு.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோது காலணி, பாட்டில்கள் வீசியதாகவும், ஜெனரேட்டர் இயங்காமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதற்கு ஆளுங்கட்சியான திமுக அரசும், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களும் பதில் அளிக்க வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சுதந்திரமான, நியாயமான முறையில் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் 8 கேள்விகளை எழுப்பி, விசாரணை அதிகாரிகளிடமும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் வழங்க உள்ளோம்.
ஒரு வாரத்துக்குள் பதிலை பெற்று, அதில் உள்ள தகவல்களையும், பாதிக்கப்பட்டோர் தெரிவித்த கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு அறிக்கை தயாரித்து பாஜக தலைமையிடம் வழங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT